உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/16

இருண்ட கண்டத்தில் உதயமாகப் போகும் புதிய தேசம்


திட்டமிடப்பட்டதன் பிரகாரம் சகல செயன்முறைகளுமே சுமுகமாக முன்னெடுக்கப்படுமானால், ஆபிரிக்காவின் மிகப் பெரிய நாடான சூடானின் தென்பிராந்தியம் உலகின் புதிய நாடாகவும் ஆபிரிக்காவின் 54 ஆவது நாடாகவும் எதிர்வரும் ஜூலை மாதம் விளங்கப் போகிறது. கடந்த வாரம் தெற்கு சூடானில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இதன் மூலம் 99 சதவீதமான தென் சூடானியர்கள் வடக்கில் இருந்து பிரிந்து செல்வதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருப்பதை அறியக் கூடியதாக இருக்கிறது. அராபிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கிற்கும் கறுப்பின கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கிற்கும் இடையே இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக நீடித்த இரு உள்நாட்டுப் போர்களுக்கும் (இவற்றில் குறைந்தபட்சம் 20 இலட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது) அவற்றின் பின் விளைவான இனப் பூசல்களுக்கும் பிறகு 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை முறைப்படியாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கான பெருமை இருதரப்பினருக்குமே உரியதாகும்.

தங்களுக்கென சொந்த நாடு உதயமாகப் போகிறதென்ற மகிழ்ச்சியில் தென் சூடானியர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பின் இறுதி முடிவுகளை சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷீர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். புதிய
தேசத்தை முதலில் வாழ்த்துபவராகத் தானே இருக்க வேண்டுமென்று விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார். அரசியல் மற்றும் மத சுதந்திரத்துக்கான வேட்கையில் இது முடிவு அல்ல, நீண்ட பயணத்தின் ஒரு தொடக்கமேயாகும். வடக்கு சூடானில் வாழ்ந்துவரும் சுமார் 20 இலட்சம் தென் சூடானியர்கள் சர்வஜன வாக்கெடுப்பில் பங்கேற்பதைத் தவிர்த்திருந்தனர். நிச்சயமாக அவர்கள் பிரிவினைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்ற போதிலும், தங்களது பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது மோசடி இடம்பெறுமேயானால், சர்வஜன வாக்கெடுப்பின் இறுதி முடிவுகளை அது செல்லுபடியாக்கிவிடக்கூடுமென்ற பீதியில் அவர்கள் வாக்களிக்காமல் இருந்துவிட்டார்கள்.நாடு பிரியப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட அவர்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கனவே எல்லையைக் கடந்து தென்சூடானுக்குள் வந்துவிட்டார்கள். மேலும் இலட்சக்கணக்கான தென் சூடானியர்கள் வடக்கில் இருந்து தெற்கிற்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் சூடானில் இருந்து அரேபிய முஸ்லிம்களும் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும் பெருமளவில் வன்முறைகள் மூளக்கூடுமென்றே ஐ.நா. அச்சம் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரையில் இருபகுதிகளுக்குமான பரஸ்பர குடிபெயர்வு வன்முறைகளின்றியதாகவே நடைபெற்றுக்கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிய தேசத்தின் ஜனாதிபதியாகப் பதவியேற்கப்போகும் சூடானிய மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவரான சல்வாகிர் நாட்டுப் பிரிவினை தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் கிடைத்திருக்கும் வெற்றியால் பெருமிதமடைந்தவராகக் காணப்படுகிறார். ஆனால், அவரும் அவரது பிரஜைகளும் எளிதில் சமாளிக்க முடியாத பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இன்னும் 5 மாதகாலத்தில் பிறக்கப்போகும் புதிய தேசம் பிரிக்கப்படாத சூடானின் எண்ணெய் வளத்தில் 80 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆனால், சூடான் துறைமுகத்துக்கு எண்ணெயைக் கொண்டு செல்லும் குழாய்க் கட்டமைப்புகள் வட பிராந்தியத்தின் ஊடாகவே செல்கின்றன. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக அளிக்கப்பட்டிருக்கும் ஆணையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு வெற்றி கொள்ளப்பட வேண்டிய சவால்களில் பிரதானமானது எண்ணெய் வளத்தின் மூலமான வருவாயைப் பகிர்ந்து கொள்வதுடன் தொடர்புடைய சர்ச்சையாகும். கடந்த வருடத்தைய தென் சூடானின் மொத்த வருவாயில் 98 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி மூலம் பெறப்பட்டதாகும்.
சூடானின் எண்ணெய் வளத்தின் நான்கில் மூன்று பங்கு தென் சூடானிலேயே இருக்கின்ற போதிலும், வடக்கு சூடானே எண்ணெய்க் குழாய்களையும் சுத்திகரிப்பு நிலையங்களையும் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிளவுபட்ட நாடு போன்றே நடைமுறையில் இருக்கும் சூடானின் எண்ணெய் வள வருவாயைப் பகிர்ந்துகொள்வதில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த உடன்பாடு சர்வஜன வாக்கெடுப்புடன் முடிவுக்கு வர வேண்டுமென்பதே சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளில் ஒன்று. புதிய தேச உதயத்துக்கு முன்பாக தெற்கிற்கும் வடக்கிற்கும் இடையே ஒளிவுமறைவற்றதும் ஒப்புரவானதுமான வருவாய்ப் பகிர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.
பெருமளவுக்கு மண் வீடுகளையும் குடில்களையும் கொண்டதாக விளங்கும் ஜுபாவைத் தலைநகரமாகக் கொண்டமையப் போகும் தென் சூடான் வருவாயில் தற்போது பெறுகின்ற அரைப்பங்கிற்கும் கூடுதலான பங்கைப் பெறுவதற்கு விரும்பக்கூடும். அதேவேளை தற்போதைய தனிநகர் கார்ட்டூமில் இருக்கும் சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் நாட்டின் தேசியக் கடனான 2800 கோடி யூரோவை புதிய அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தும் சாத்தியம் இருப்பதாக சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகிறார்கள். தென்சூடானின் சனத்தொகை தொடர்பில் வெளியிடப்படுகின்ற புள்ளிவிபரங்கள் குறித்து சர்ச்சைகள் கிளப்பப்படுகின்ற போதிலும் தற்போது சுமார் 60 இலட்சம் மக்களே அங்கு வாழ்வதாகக் கணிப்பிடப்படுகிறது. இந்த மக்களுக்கு முறையான உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரேயொரு வைத்தியசாலையே அங்கேயிருக்கிறது. நைல் நதியோரமாகவுள்ள தென் சூடானின் 1200 கிலோமீற்றர் நீளப்பிரதேசத்தில் இருக்கின்ற ஒரே பாலமும் தலைநகர் ஜுபாவில் தான் அமைந்திருக்கிறது. தென்சூடானில் தற்போது செயற்படுகின்ற கைத்தொழில்கள் என்றால் குடிநீர் தயாரிப்பும் பியர் தயாரிப்புமேயாகும்.
அரசியல் நிலைவரத்தைப் பொறுத்தவரை ஆயுதபாணிக் குழுக்களின் தலைவர்களின் ஒத்துழைப்பை சல்வா கீர் பெற்றிருக்கின்றபோதிலும் சூடானிய மக்கள் விடுதலை இராணுவம் புதிய தேசத்தில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கப்போகிறது என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடியதொரு விவகாரமாகும். எண்ணெய் வளமுடைய எல்லைப் பிராந்தியமான அபியீயின் அந்தஸ்தும் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இவ்வாறாக புதிய தேச உதயத்துக்கு முன்னால் பெருமளவு பிரச்சினைகள் விரிந்து கிடக்கின்றன. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளை இதுவரையில் நடைமுறைப்படுத்துவதில் காட்டிய அரசியல்பக்குவத்தை எதிர்வரும் கட்டங்களிலும் வடக்கினதும் தெற்கினதும் தலைவர்களும் தொடர்ந்தும் வெளிக்காட்டிச் செயற்படுவார்கள் என்றே உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.
நன்றி-தினக்குரல்

2 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.