உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/24

இசையெனும் அமுதம்


இசை, மொழி இனம் மதம் கடந்து அனைவரையும் இணைக்கக் கூடியது, அதிலும் குறிப்பாக இந்தியாவில், இந்து மதத்தில் "இசையால் தமிழாய் இருப்பவனே" என்றும், "இசையால் வசமாகா இதயம் எது, ஈசனே இசைவடிவம் எனும்போது" என்றும் இசை இறைவடிவாகவே நோக்கப் படுகிறது. கலைமகள் வீணையிசைப்பதாகவும், நாரதர் கந்தருவர்கள் முதலியவர்கள் இசையில் தேர்ந்தவர்கள் எனவும், கண்ணனின் குழலிசையில் பசுக்களும், பறவைகளும், ஏன்... செடி கொடிகள் கூட மயங்கி நின்றதாகவும் இசை தொடர்பான ஏராளமான தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
உலகெங்கிலும் இசை என்பது ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்காகக் கருதப்படுகின்ற அதே நேரத்தில் இசைக்கு நோய்களை விரைவாகக் குணப்படுத்தும் தன்மை இருப்பதாகவும் நம்பப் பட்டு வருகின்றது. இன்று உலகின் பல பகுதிகளில் இசை சிகிச்சை (Music Therapy) என்ற இசை மூலம் நோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பல கருநாடக இசைக்கலைஞர்கள், பல்வேறு இராகங்களுக்கு நோய்களைக் குணமாக்கும் சக்தி இருப்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இவற்றில் பல சுவாரசியமான, பயனுள்ள தகவல்களும் கிடைத்துள்ளன.

மூளையின் செயல்பாடுகளை இசையால் கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது. வேகமான தாளமுள்ள (Fast Beat) இசை மூளையில் உள்ள அலைகளைத் துரிதப் படுத்துவதாகவும், அதிகமான கவனம் மற்றும் தயார்நிலையில் இருக்க மூளையைத் தூண்டுவதாகவும், மென்மையான (Slow beat) மூளையை அமைதிப்படுத்தி, தியானத்திற்குத் தூண்டுவதாகவும் இக்கழகம் கூறுகிறது.
இவ்வாறே நமது மூச்சு விடும் வேகம் மற்றும் இதயத்துடிப்பு இசைக்கேற்றபடி மாற்றமடைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக உடல் மற்றும் மனச்சோர்வு, இறுக்கம் இவற்றுக்கு இசை அருமருந்தாகச் செயல்படுகிறது. உடலுக்கும் மூளைக்கும் ஓய்வு கொடுப்பதற்கும், அமைதியூட்டுவதற்கும் இசை பயன்படுகிறது. மென்மையான இசை தூக்கத்தைத் தரும் மருந்துகளுக்கு(Tranquilizers) மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இசையைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் தூக்கமருந்துகளின் (Sedatives)அளவையும், வலி மறப்பு மருந்துகளின் (Pain Killers)அளவையும் குறைக்கமுடிகிறதாம்.

இசையானது உடலின் வளர்சிதை மாற்றத்தில் (Metabolism) தாக்கம் ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இசை நமது மூச்சுவிடும் வேகத்தை மாற்றியமைக்கக் கூடும் எனவும், ஹார்மோன்களின் உருவாக்கத்தை மேம்படுத்துகிறது எனவும், இசையானது நமது தசை மற்றும் நரம்புமண்டலத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உதவி செய்கிறது எனவும் கூட ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இசை சிகிச்சையானது முற்றிலும் இயற்கையானது, செயற்கையான மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தாதது என்பதால் இது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

இசையால் கட்டுப்படுத்தப் படும் நோய்கள்:

ஆட்டிசம் (Autism) என்ற நோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு, தகவல் தொடர்பில், குறிப்பாக வாய்விட்டுப் பேசுவதில் பிரச்னைகள் இருக்கும். இத்தகைய குழந்தைகளுக்கு இசை சிகிச்சை கொடுக்கப்படுகையில் மிகுந்த முன்னேற்றம் தெரிவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.

மனச்சோர்வு, மன அழுத்தம்(Depression) இவற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கைகண்ட மருந்தாக இசை உள்ளது. மென்மையான இசை நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதால், நிம்மதியான தூக்கம் உண்டாகின்றது. இசை மனத்திற்கு மகிழ்வூட்டும் காரணி என்பதால், மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை இசை சிகிச்சை அவர்களுடைய மன வேதனை அல்லது பாதிப்பில் இருந்து வெளியில் வரவைக்கிறது.

அல்சமைர் (Alzheimers) எனப்படும் வயதானவர்களைத் தாக்கும் மறதி நோயைக்கட்டுப்படுத்தவும் இசை சிகிச்சை பயன்படுகிறது. இசை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இத்தகைய நோயாளிகளின் உடலில் மெலடோனின்(Melatonin), எபிநெப்ரின்(Epinephrine), நார் எபிநெப்ரின் (Nor epinephrine)முதலிய சுரப்புகள் அதிகரித்ததாக அவர்களிடம் இரத்தப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. அவ்வாறே பார்கின்சன்(Parkinson's) மற்றும் டெமென்ஷியா (Dementia) போன்ற நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் இசை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது, பார்கின்சன் நோயாளிகள் உடலில் அசைவுகள் தென்பட்டதாகவும், டெமென்ஷியா நோயாளிகள் தமது பழைய நினைவுகளை மீளப்பெற்றதாகவும் கூடத் தெரிய வந்துள்ளது.

மூளையின் அதிர்வுகள்/அலைகளுக்கும் நரம்பு மண்டலத்திற்கும் இசையுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே நரம்பு தொடர்பான நோய்களை இசை மருத்துவம் எளிதில் குணப்படுத்துகிறது.

இசையை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதன் மூலம் நாம் நமது உடல் நலத்தைப்பேணவும், மன அமைதியுடன் வாழவும் முடியும். அதற்கான சில உத்திகள் இதோ!

நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்து களைத்துத் திரும்புகிறீர்களா? உற்சாக மனநிலைக்குத் திரும்ப வேண்டுமா? மிக மெதுவான இதமான இசையைவிட வேகமான தாள அமைப்புள்ள பாடல்களைக் கேட்டீர்களானால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். (நினைவில் வையுங்கள். ஒன்று..வேகமான தாள அமைப்புள்ள இசை என்பது ராக், பாப் பாடல்களாக இருக்கவேண்டாம். அத்தகைய பாடல்கள் நரம்பு மண்டலத்தை மேலும் தூண்டி விடும். தொடர்ந்து இத்தகைய இசையைக் கேட்கையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும். இரண்டு... உங்களுக்கு அறவே பிடிக்காத இசைவகையை யார் வற்புறுத்தலுக்காகவும் கேட்க வேண்டாம். அதுவும் நேர்மாறான விளைவையே உண்டாக்கும். உங்கள் விருப்பத்தின்பேரில் உங்களுக்குப் பிடித்த இசையை மெல்லிய தொனியில் (முடிந்தால் காதில் headphone மாட்டிக்கொண்டு) கேட்பதுதான் நல்லது.)

மனம் அமைதியாக வேண்டுமா? அலுவலக, குடும்பக் குழப்பங்களால் மன இறுக்கமா? தரையில் பாயை/விரிப்பை விரித்து தளர்வாகப் படுத்துக்கொண்டு 15 முதல் 20 நிமிடம், மிக இதமான, இனிமையான இசையைக் கேட்டுக்கொண்டிருங்கள். கருவி இசை (Instrumental Music) (வீணை, வயலின், குழல், மாண்டலின் முதலியன) அதிகப்பலனைத் தரக்கூடியவை. அவற்றில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பழைய பாடல்கள், கர்நாடக இசை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதை இசை மருத்துவத்தில் 'ஒலிக்குளியல்' (Sound Bath) என்கிறார்கள். இது மிகுந்த அதிகப்பலனைத் தருவதாகக் கூறுகிறார்கள். இதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் உங்கள் தனியறையாக, அல்லது பொதுவாக யாரும் உங்களைத் தொந்தரவு செய்யாத இடமாக இருப்பது சிறப்பானது.

நமது இதயத்துடிப்பைவிட மெதுவாக தாள அமைப்புள்ள (Rhythm) இசையைக்கேட்டவாறு மூச்சை ஆழ இழுத்துவிடுவது நமது உடலில் அமைதியைப் பரவச்செய்யும். இயற்கையான ஒலிகளைக்கேட்பது இன்னும் பலன் அளிக்கும் என இசை மருத்துவர்கள் சொல்கின்றனர். கடல் அலையின் ஓசை, காட்டின் அமைதியான, மெல்லிய ஒலிகள் (காற்றின் அசைவு, சருகுகள், இலைகள் அசையும் ஒலி) இவை நரம்பு மண்டலத்திற்கு (மூளைக்கு) புத்துணர்வு ஊட்டுவதில் முதலிடம் வகிக்கின்றன. ஒருவேளை உங்கள் இல்லம் அல்லது அலுவலகம் கடற்கரைக்கு அருகாமையில் இருப்பின் அடிக்கடி கடற்கரை சென்று காற்றுடன், கடலின் அலையோசையையும் வாங்கி வரலாம். இல்லையெனில் இதுபோன்ற ஒலிகளை உடைய குறுந்தகடுகள் (CD) கிடைக்கின்றன. அவற்றை வாங்கியும் காதோடு கேளுங்கள்.

இசையமுதைப் பருகினால் இனிய வாழ்வு நிச்சயம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.