உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/27

தாழ்ப்பாள்களாலும் பூட்டுகளாலும் ஆன தமிழ் இலக்கணங்கள்

தொல்காப்பியம், பெறுமதியுள்ள நூல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தமிழின் சிறப்புகளையெல்லாம் தாங்கி நிற்கும் ஒற்றைத் தூணே அதுதான் என்பது போலப் பேசப்படும் கூற்றுக்கள் எல்லாம் மிகுவுரையே தவிர வேறல்ல. தமிழ்ப் பண்பாட்டுப் பதிவுகள் எந்தளவு தொல்காப்பியத்துக்குள் இருக்கின்றனவோ அந்தளவுக்குத் தமிழுக்கு எதிரான பதிவுகள் அதில் உண்டு. முதலில் அது, “தமிழில் இனி எழுத வருபவர்களுக்கு அடிப்படையாக முன்னோர் எழுதிவைத்துள்ள இலக்கியக் கோட்பாடுகளைத் தொகுத்துத்தரும் நூலே தவிர, வேறு ஒன்றும் அல்ல. அது தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் அல்ல என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும்” என்கிறார் எங்கள் பேராசிரியர் ச.பாலசுந்தரம். அதாவது தொல்காப்பியம் என்பது, செய்யுளில் இலக்கியம் படைக்கும் எண்ணம் கொண்டோர்க்கு உதவும் வழிகாட்டும் புத்தகம். தொல்காப்பியத்தில் இந்த நோக்கத்தையும் மீறி, அன்றைய தமிழ் வாழ்வு பற்றிய சிந்தனைச் சிதறல்கள் இடம் பெற்றே இருக்கிறது. படைப்பாளர்கள், தொல்காப்பியம் படித்துத் தம் படைப்புகளை எழுத வேண்டும் என்று விதிக்க முடியாது. தொல்காப்பிய இலக்கணம் மீறிய சிறந்த படையல்கள் தமிழில் பலப்பல. எனினும் அதைப் பயின்று மேல் செல்வது பயன்தரக்கூடும் என்பது என் கருத்து. தொல்காப்பியம் மட்டுமல்ல, எந்த இலக்கணத்தையும் வாசிப்பதன் நோக்கம் அவைகளைக் கடந்து மேல்செல்ல வேண்டும் என்பதற்கேயாகும். இலக்கணம் என்பதே கடந்து செல்லலைத் துரிதப்படுத்தும் தூண்டல். பெருமதியான சங்கக் கவிதை தொல்காப்பியத்துக்குக் கடன்பட்டதுமல்ல.
தம் சமகாலச் சிந்தனையாளர்களை ஒட்டித் தொல்காப்பியரும், மனித வாழ்க்கையை இரு பெரும் பிரிவாகப் பகுத்துக் கொள்கிறார். ஒன்று அகம். மற்றது புறம். அகம் என்றால் காதல் என்பது பொதுவான விளக்கம். ஆனால் தொல்காப்பியரும் பெரும்பாலான சங்கப்புலவர்களும் காதலை, திருமணம் என்கிற இலட்சியத்துக்குக் கொண்டு செல்கிற ராஜபாட்டையாகவே கருத்தாடல் நிகழ்த்தினர். ஆண்- பெண் உறவு என்பது கட்டாயமாகக் கல்யாணத்தில்தான் முடிய வேண்டும் என்பதை  மிகக் கடுமையாக வலியுறுத்தியவராக இருக்கிறார். அகம் என்பது காதல் என்று சொன்னது மேற்பூச்சாக இனிப்பு தடவியதுதான். உண்மையில் அது திருமணம் என்கிற நிறுவனமே. திருமணத்துக்கு உதவாத வெறும் காதல் மட்டுமே நின்றுவிடுகிற கைக்கிளையும் பெருந்திணையும் பெருமைக்குரியது அல்லாத சிறுமையோர் ஒழுக்கம் என்கிற வன்முறையின் எல்லைக்கே செல்கிறார். தொல்காப்பியரின் கைக்கிளையையும் பெருந்திணையையும் குற்றேவல் செய்வோர், இழிசினர் போன்றவர்களுடைய சமாச்சாரம் என்பது உரையாசிரியர்கள் கருத்தாக இருந்தது. தொல்காப்பியர், பொதுமக்கள் வாழ்க்கை முறையைத் தன் இலக்கணத்துக்கு அலகாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, உலகம் என்பது உயர்ந்தோர் வழக்கே என்கிறார் அவர். வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசு, அதிகாரம் போன்ற நிறுவனத் தேவைகளுக்கு முன்நிபந்தனையற்ற குடும்ப அமைப்பை வலியுறுத்துவதன் மூலம், அரசு அதிகாரம் அமைய சிந்தனை வழி உதவி புரிகிற அறிவாளராகவே செயல்படுகிறார் தொல்காப்பியர்.

அதுபோலவே, புறம் என்பதுக்கும் தொல்காப்பிய விவரணம் இருக்கிறது. புறமாகிய வெளி உலகம், வானத்துக்குக்கீழ் உள்ள மக்கள் திரளில் தகிப்பும் கொந்தளிப்பும் விழாவும் கொண்டாட்டமுமான வாழ்க்கை புறம் தள்ளப்பட்டு, மக்களின் புற வாழ்க்கையின் அடிப்படை சாராம்சமாக வீரத்தையும் போர்ச் செய்கைகளையும், போர் தொடர்பான  சங்கதிகளை மட்டும் தொகுக்கிறார். இதன் அர்த்தம், மக்கள் வாழ்க்கையை அதன் உண்மை உள்ளீடான இன்பத் தேட்டத்தைப் புறம் தள்ளி, அரசர்களின் அதிகாரத் தேவையான யுத்தங்களுக்கு உதவும்படியான அறிவார்த்தமற்ற சுயதீர்மானம் இல்லாத ஜடப்பொருளாகவே மாற்றியமைக்கிறார். மாடுபிடிச் சண்டையில் தொடங்கிய சண்டியர் வாழ்க்கை, வீரர் செத்து நடுகல்லாக வழிபடப்படும்வரை போர்ச்செய்திகளைச் சொல்வதன் மூலம் புறம் என்பதே போர் நிகழ்ச்சிதான் என்கிறார் அவர். வாழ்க்கை நிலையாமை முதலான, அறம்சார்ந்த பல சிந்தனைகளைப் புறநானூறு போன்ற இலக்கியங்கள் பேசினாலும், இலக்கணக்காரருக்குப் பிரதானம் போராகவே இருந்தது,
எழுத்து, சொல், செய்யுள், அலங்காரம் பற்றிய பல செய்திகளை தொல்காப்பியம் சொன்னாலும், தொல்காப்பியம் மையப்படுத்துவது, குடும்பத்தையும் போரையுமே ஆகும்.
காதல் கொண்ட பாத்திரங்களைப் படைக்க நினைக்கும் புலவர்க்கு, ஒரு தொடக்கப் புள்ளியைத் தந்து, அந்தக் காதலர்களில் கட்டாயமாக இருக்கவேண்டிய தகுதிகளையும் சொல்கிற தொல்காப்பியரின் காதலர்களை நாம் அறிமுகம் கொள்வோம்.
அந்தக் காதலர்கள் ஊழ் என்பதன் ஆணை காரணமாகவே ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். ஊழில் இரண்டு வகை. ஒன்று இணைக்கும் ஊழ். மற்றது பிரிக்கும் ஊழ். இணைக்கும் ஊழ்  ஆளான காரணமாக, திட்டமிடல் இன்றி தலைவனும் தலைவியும் சந்திக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவரைக் கண்பார்க்கிறார்கள். அவர்கள் “தகுதியில்” ஒப்பானவர்கள். அவனுக்கும் அவளுக்குமான தகுதிகளில் தலைவன் தலைவியைக் காட்டிலும் கூடுதலான தகுதிகள் பெற்றிருந்தால் தவறு இல்லை. ஆனால் ஒருபோதும் தலைவி தகுதிகளைப் பெற்றவளாக இருந்துவிடக்கூடாது. இதில் தொல்காப்பியர் மிகவும் கண்டிப்பு காட்டுகிறார்.
அது என்ன தகுதி?
தகுதிகள் ஒப்ப இருக்க வேண்டும் என்று சொன்ன சூத்திரத்துக்கு (1039) அடுத்து இருக்க வேண்டிய  சூத்திரம் 1219-ல் வைக்கப்படுகிறது. தொல்காப்பியம், பல பேர் கைப்பட்டு உருமாறிக் கிடக்கின்றமைக்கு இதுவும் ஒரு ஆதாரம்-தகுதிகளில் முதலாவது வருவது பிறப்பு. அதாவது நல்ல குலப்பிறப்பு. குலம் என்பது அந்தணர் முதலான நாற்குலம். ஐந்தாம் குலமோ ஆறாம் குலமோ ஆகாது. அப்படி எதுவும் ஆகிவிட்டால் அது தவறு? சமூகப் பிரச்சினை? (ஆனால் குழந்தை மட்டும் பிறக்கும்!) இரண்டாவது குடிமை-பண்பாடு. அதாவது சால்பு. குலஒழுக்கம் செயற்பண்பையும், குடிமை என்பது குணப்பண்பையும் குறித்து வரும் என்கிறார் ச.பாலசுந்தரம்.
மூன்றாவது ஆண்மை. இது ஆளுமைத்திறம். ஆண்தன்மை இல்லை. இருபாலுக்கும் பொதுவான ஆளுமைத்தன்மை. இதன் அடிப்படைச் சொல் ஆள். ஆண் இல்லை. நான்காவது-ஆண்டு. அதாவது வயது. தலைவனுக்கு 16. தலைவிக்கு 12. தலைவன் வயதில் கால்கூறு குறைந்து தலைவிக்கு இருக்கவேண்டும். அடுத்து உரு. உரு என்பது வனப்பு. அழகான தோற்றப் பொலிவு. இருவருமே அழகுடையவராக இருக்கவேண்டும். அடுத்து வருவது நிறுத்த காமவாயில். இது ஒரு முக்கியமான தொல்காப்பியரின் அவதானிப்பு. காம உணர்வு இருவருக்கும் நிகராக இருத்தல். மிக அவசியமான தகுதியாகத் தொல்காப்பியர் காண்பது அவர் காலத்துக்கு மீறிய பார்வை என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். அடுத்தது நிறை. ஒருவகை அடக்கம். மறை பிறர் அறியாமலே நெஞ்சில் நிறுத்துதல். அடுத்து அருள். ஒருவர் குறையை மற்றவர் நிறையாக ஏற்றுக்கொள்ளும் மனமாட்சி. அருள் என்பது அன்பின் குழந்தை என்று வள்ளுவர் கூறுவார். அடுத்து வருவது உணர்வு. இதன் பொருள் ஒருவரின் உள்ளக்குறிப்பை மற்றவர் புரிந்துகொள்வது. கடைசியாக வருவது திரு. இதற்குப் பலவிதமாகப் பொருள் கூறுகிறார்கள் உரையாசிரியர்கள். எனக்குத் தோன்றுவது, இல்லறம் நடத்தத் தேவையான செல்வம். தெய்வப் பொலிவு என்கிறார் ச.பா. பொலிவு மேற்சொன்ன பலவற்றில் அடக்கமாகும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பல உள. காதலர்கள் ஆகும் தகுதிக்கு இருவரும் காதலில் ஈடுபடுதல் மட்டும் போதாது. அவர்கள் இருவர் பிறப்புக்கும் சம்பந்தப்படாத குலமும் குடியும் காதலில் எந்த இடத்தை வகிக்கின்றன என்பதே. குலத்தையும் குடியையும் பிறந்தவர் தீர்மானிப்பது இல்லை. ஒருவர் செயல்பாடுதான் அவர்களின் தகுதியைத் தீர்மானிக்குமே அன்றி, மற்றவைக்கு காதலில் என்ன இடம்? இந்தப் பகுப்பு அக்காலத்தைய சமூகச் சூழ்நிலையைக் குறிக்கும் என்பதாகக் கொண்டாலும், தொல்காப்பியரின் தனிப்பட்ட அபிப்ராயமாக இதுதான் இருந்ததா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். இன்னொரு முக்கியமான விஷயம், அடியோர், விளைவனர், இழிசினர் என்று சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் புறக்கணித்து ஒதுக்கும் உழைக்கும் மக்களுக்கு இப்படியான, “உயர்ந்த” காதல் ஒழுக்கம் இல்லை என்று நமது தெய்வத் தமிழ் அல்லது செம்மொழித் தமிழ் தீர்மானித்து இருக்கிறது என்பதுதான்- மிக முக்கியமான கருதுகோள் ஆகும்.
தொல்காப்பியர், இலக்கியம் வாழ்க்கையை அல்லது யதார்த்தத்தை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்கிற கண்ணோட்டம் இல்லாதவர். புனைவின் முக்கியத்துவத்தையும் தேவையையும் அவர் மிக ஆரோக்கியமாக ஒப்புக்கொள்கிறார். நிகழ்ச்சிகள், இலக்கியத்தில் நாடகத்தன்மை கொள்ளவும், இயல்பு வாழ்க்கையையும் சார்ந்தவையாக இருக்கலாம் என்றும் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அதேசமயம், இலக்கியப் பாத்திரங்களுக்கு விதிக்கும் இலக்கணங்கள், வைதீகத்தை விடவும் கடுமையானவை. வைதீகம் என்பதன் கடுமையான வெளிப்பாடாகவும் இருக்கிறது. மட்டும் அல்லாமல் தொல்காப்பியம், “உயர்ந்தோர்” எனப்பட்ட மேட்டுக்குடியினருக்கான இலக்கணமே அன்றி தமிழ் நிலம் தழுவிய அனைத்து மக்களுக்குமானது என்பதும் இல்லை. சாதி இலக்கியம்போல இது மேட்டுக்குடி இலக்கணம்.

பொருள் தேடிச் செல்லுதல் வாழ்க்கைக்கு மிக ஆதாரமான ஒன்று. செல்வம் மட்டுமே குடும்பத்தை நடத்திச் செல்லும் ஆதாரம். முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது. ஆக, தலைவர்கள் நடந்தும், கப்பல் ஏறியும் பணம் பண்ணப் போகிறார்கள். ஆனால், பெண்களை அழைத்துக்கொண்டு போகக்கூடாது. இதன் பொருள், பெண்களும் பொருள் தேடிப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதாகும்.
உயர்குடித் திணைகளாகிய- ஒழுக்கங்களாகிய-ஐந்திணைப் பாடங்களில்-அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் நீர்வளம் இல்லாத பாலைச்சுரம் பற்றிய பாடல்களில் -தலைவர்களாகிய ஆண்கள் பெருமையுடையவனாக, அறிவுத்திறன் உடையவனாக இருக்கவேண்டும். பெருமை இல்லாத, அறிவு இல்லாத ஆண்களைப் படைப்பது ஒன்று கைக்கிளையாக இருக்கலாம். அல்லது பெருந்திணையாக - இழிதிணையாக- இருக்கலாம்.  இந்த இரண்டு திணைகளும் சமூகத்தின் அடிமட்டத்து வாழ்க்கைக்குரிய திணைகள். காரணம் என்னவெனில், இந்த மக்கள் காதலைப் பரிபூரணமாகத் துய்க்கத் தெரியாதவர்கள், முடியாதவர்கள். 
தலைவிகளுக்கு என்ன இலக்கணம்? பெண்களுக்கு அச்சமும், நாணமும் மடமும். இதன் பொருள், அஞ்ச வேண்டியதுக்கு அஞ்சும் சுபாவம் கொண்டவளாக இருக்க வேண்டும். நாணம் உடையவளாக இருக்க வேண்டும். அறிந்தும் அறியாதவள் போல இருக்கும் (நடிக்கும்) குணமே மடம். பேதமை அல்ல இது. நிறைகுடத்தன்மை. நிறைகுடம் ததும்பக்கூடாது. இதன் விரிவாக எதையும் ஏன், எதற்கு என்று கேட்கக் கூடாது. தலைவன் ஊசி என்றால் நூலாக இருக்கவேண்டியவள் தலைவி. கவிதைகளில் இடம்பெற வேண்டிய பெண்கள், ஒன்று உயர், மேட்டுக்குடிப் பெண்களாகவும், மேற்கொண்ட குணங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது தொல்காப்பியர் கருத்து.
தலைவிக்கு மிக இன்றியமையாத ஒழுக்கமாக, ‘எந்த அளவுக்குக் காமம் மிகுந்தாலும் அதைத் தலைவனுக்கு அவள் சொல்லக்கூடாது. மிக லேசான குறிப்பால் உணர்த்தலாம். எப்படியெனில், புது மண்பானையுள்ளே பெய்துவைத்த நீர், புறம் லேசாகக் கசிந்து காட்டுவது போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம்’ என்கிறார் அவர். ஆனால் தலைவர்கள் தங்கள் காமத்தைச் சொல்லலாம். அனுபவித்தும் கொள்ளலாம். பெண் இழுத்து மூடிக்கொண்டிருத்தலே மேன்மை. இரவிலும் பகலிலும் தலைவன், தலைவியைத் தேடி வந்து சந்திக்கலாம். இலக்கணம் அதை அனுமதிக்கிறது. ஆனால், தலைவிக்கு அது கூடாது. பல நாட்கள் அவன் வராமல் கூட இருக்கலாம் என்றாலும் தலைவி அவன் ஊருக்குச் செல்லுதலோ, தேடிக் காண்பதோ இழுக்கு. ஆண்களுக்கு எவ்வளவு சௌகர்யமான கதவுகளைத் திறந்துவைக்கிறார் தொல்காப்பியர்?
காதலைக் களவு என்றும் கற்பு என்றும் இரண்டு பெரும் பகுதியாகப் பிரித்து இனம் காண்கிறார் தொல்காப்பியர். களவு என்பது பிறர் அறியாமல், சமூகம் அறியாமல் தலைவனும் தலைவியும் சந்திக்க நேர்ந்து காதல் உறவாடுவது. திருமணத்துக்கு முன்பு, புணர்ச்சி ஏற்படுகிறது என்பதுபற்றி தொல்காப்பியர் அலட்டிக்கொள்ளவில்லை. இதை இயல்பாகவே அவர் ஏற்றுக்கொள்கிறார். தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறார். இயற்கையைச் சுலபமாக அழித்துவிட அவரால் முடியாது. ஆனால், மெய்ப்புணர்ச்சி நடந்து முடிந்தபிறகு, இரண்டு பேர் பெரும் பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். ஒருவர் அந்தத் தலைவி. மற்றவர் தொல்காப்பியர். தலைவன் மிகவும்  மகிழ்ச்சியாக வீடு போய்ச் சேர்கிறான். பின் எதற்கு இந்த இரண்டு பேரும் கலக்கம் அடைகிறார்கள்? தலைவி அச்சத்துக்குக் காரணம், அனுபவித்தவன் கைவிட்டுவிடுவானோ என்ற அச்சம். விட்டால்தான் என்ன? இன்னொரு நாய் வராமலா போகும்? ஆனால், புணர்ச்சி குழந்தையாக உருமாறிவிடக்கூடாது என்ற அச்சம். சமூகம் என்ன சொல்லும் என்கிற அச்சம். இருக்கட்டுமே என்று அவள் சும்மா அமைந்துவிட முடியாது. வாழ்க்கை இதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்வதில்லை. அது நடந்துகொண்டே இருக்கும் நதி. அது எதற்காகவும் தயங்கி நிற்பதில்லை. ஆனால் இலக்கண ஆசிரியருக்குத்தான் உறக்கம் போய்விடுகிறது. காரணம், களவைக் கல்யாணத்துக்குள் கொண்டு சேர்க்கும் புனிதச் சிலுவையைத் தொல்காப்பியர்களும் பண்பாட்டுக் காவலர்களும் சுமந்துகொண்டு திரிகிறவர்களாக இருக்கிறார்கள். முதலில் தொட்டவன் கட்டிக் கொள்கிறவனாக இருக்க வேண்டும். காரணம், வேறு ஒன்றும் இல்லை. மழை! இரண்டாவது ஆண், மழையைத் தடுத்துவிடக்கூடும். பெய்யெனச் சொன்னால், மழை பெய்யாமல் போய், பத்தினித் தன்மைக்கு மாசு வந்துவிடக்கூடும். நம் இலக்கண நீதிநூல் ஆசான்களுக்கெல்லாம் அந்த இரண்டாவது நபரே லட்சியம். அவர்கள் மனதில் அந்த இரண்டாவது நபரே நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறான். இரவு பகலாகப் பெண்களின் வீட்டுக்கதவுக்கு வெளியே இவர்கள் கையில் ஆயுதங்களோடு காவல் காத்தபடி நிற்கிறார்கள். இலக்கியத்துக்கும், வாழ்வியலுக்கும் எதிராக எவ்வளவு பெரிய வன்முறையை நிகழ்த்துகிறார்கள் இவர்கள்.
காதலின், காதலர்களின் உடல் சார்ந்த பல நிலைகளைச் சிறப்பாகவே சொல்லும் தொல்காப்பியர்,  கற்பு அல்லது திருமணம் என்று வருகிறபோது மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். கற்பியல் என்ற பகுப்பில் முதல் சூத்திரமே கற்பு எனப்படுவது யாதெனில் என்று கேட்டு இப்படிச் சொல்கிறார்.
1. கரணம் என்கிற சடங்குகளோடு
2. கொள்ளுதற்குரிய மரபைச் சேர்ந்தவன், கொடுப்பதற்குரிய மரபைச் சேர்ந்தவர்கள் கொடுக்கப் (பெண்ணை) பெற்றுக் கொள்வது.
ஒன்று, தமிழ்ச் சமூகத்தில் அதுவரை இல்லாத சடங்கு என்கிற வைதீக நடைமுறைகளை அறிமுகப்படுத்துகிறார் என்பது. அகநானூறு இரண்டு பாடல்களில் (66,86) திருமண நிகழ்ச்சியைச் சொல்கிறது. அவைகளில் சடங்கு எனச் சொல்லப் பெரிதாக ஏதும் இல்லை. காப்பியரோ சடங்கை அழுத்திச் சொல்வது சிந்தனைக்குரியது. இரண்டாவது, கொடுக்கும் மரபை உரியவர் யார்? கொள்ளும் மரபைக் கொண்டவர் யார்? காதல் திருமணத்தில் கொடுக்கும் மரபு, கொள்ளும் மரபு எங்கிருந்து வந்தது? இச்சடங்குகளை வதுவைச் சடங்கு என்கிறார் இளம் பூரணர். வேள்விச்சடங்கு என்கிறார் நச்சினார்க்கினியர். கொள்ளுதல், கொடுத்தல் மரபுகளுக்கு உண்மையாக என்ன பொருளும் தேவையும் இருந்திருக்கும்? இந்த மரபினரின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் என்னவாக இருந்தன. கொடுக்கும் மரபுக்கும் கொள்ளும் மரபுக்கும் விரோதமாகக் காதலித்தவர்கள், காதலித்து இருந்தால் கொடுப்பவர்கள் சம்மதித்து இருப்பார்களா, கொள்பவர்கள் என்ன எதிர்வினை ஆற்றி இருப்பார்கள் என்பதே என் கேள்வி. இந்த மரபுகள், அந்தணர் முதலாக அல்லது அரசர் முதலான வகுப்புகளைக்  குறித்தனவா அல்லது  வர்க்கம் சார்ந்ததா அல்லது சாதி போன்ற ஒன்றைச் சார்ந்ததா என்பது ஆராய வேண்டியதாக இருக்கிறது. தலைவன் தலைவி இருபக்கத்து முதுகுரவர்களும் இணைந்து திருமணத்தை நடத்திவைத்தார்கள் என்பதுதானே சரியாக இருந்திருக்கும்?கூடுதலான சடங்கு மற்றும் மரபு என்பதற்கான அசல் பொருள் குலம், குடி, வர்க்கம் சார்ந்த மரபுகள் உடைக்கப்படாத, பாதுகாப்பான ஆணுறை என்பது போல பாதுகாப்பான திருமண முறைகளையே தொல்காப்பியர் சொல்கிறார் என்றே நான் கருதுகிறேன்.
கற்பு என்று தொல்காப்பியர் சொல்லும் இடங்கள் எல்லாம், வலியுறுத்தும் சங்கதிகள் எல்லாம் அது பெண்ணுக்குச் சொல்லப்படும் விதிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் அர்த்தம் சட்டபூர்வமாகச் சொந்தம் கொண்ட கணவர் அல்லாமல் இன்னொரு ஆண்மகனின் வேட்டிக் காற்று கூட திருமணம் ஆன அல்லது கற்புக் கடம் பூண்ட இல்லத்தரசிகளின் மேல் பட்டுவிடக்கூடாது என்பதுதான். தொல்காப்பியர் பல நூறு மரத் தாழ்ப்பாள்களையும், இரும்புப் பூட்டுகளையும் செய்து வைத்துக்கொண்டு அலைகிறார். ஆனால் எது ஒன்றையும் அவர் ஆண்களுக்குச் செய்துவிடவில்லை. கதவுகளை மட்டும் அல்ல, ஜன்னல் கதவுகளையும்கூட ஆண்கள் வெளியேற அவர் மறுப்பு சொல்லவில்லை. அத்தனை சட்ட விதிகளும் பெண் உறுப்புகளைப் பெண்களின் சம்மதமும் அனுமதியும் இன்றிக் Ôகாப்பாற்றவும்Õ மற்றும் Ôதூய்மைப்படுத்தவும்Õ கதறுகின்றனவே அன்றி, ஆண்குறிகளைப் பற்றி அவை கவலைப்படுவதாக இல்லை. ஆண்களின் பரத்தையர் ஒழுக்கத்தைக் கடிய தொல்காப்பியர் தயாராக இல்லை. கடிய வேண்டிய அவசியம் இல்லை என்பது என் சொந்தக் கருத்து. காதல் உறவுகளைத் தீர்மானிக்கும், தேர்ந்தெடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண்களுக்கே  இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். ஆணை மறுக்காதவர்க்குப் பெண்ணை மறுக்கும் உரிமை எப்படி வருகிறது என்பதே நம் கேள்வி.
இலக்கிய நெறிகளைச் சொல்கிறவர், சமூகத்தில் நிலவும் அத்தனை உறவுகளையும் பேசுவதுதான் நியாயமாக இருக்கமுடியும். பெண், ஆண், அரவாணிகள் என்கிற பால்கள் மூன்றில், யார் யாரோடு இணைவது என்கிற பால்சார்ந்த தேர்வுகள் முற்றிலும் அவர் அவர்களுக்கே உரியது என்பதே நாகரிகமான இலக்கணமாக இருக்கமுடியும்.
தமிழ் இலக்கணங்கள், அந்த நாகரிகத்தைக் கற்கவில்லை.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.