உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/04/13

அண்ணாவின் அருங்குணம்


-முனைவர் மா.  தியாகராஜன்.
1957ஆம் ஆண்டு அண்ணா காஞ்சிபுரம் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளருடைய இயக்கத்தைச் சேர்ந்த சிலார், அண்ணாவின் பிறப்பை இழிவுபடுத்தும் வண்ணம் தரக் குறைவான கருத்துக்கள் எழுதப்பட்ட விளம்பரத் தட்டி ஒன்றை அண்ணா வீட்டிற்கு எதிரில், தெருவில்அனைவரும் பார்க்கும்படி அமைந்திருந்தனர். அதனைப் படித்த அண்ணாவின் தம்பியர் ஆவேசம் அடைந்தனர். புயலைப் போலப் பொங்கி எழுந்தனர். அவர்கள் அண்ணாவிடம் “அந்த விளம்பரத் தட்டியை நாங்கள் அகற்றப் போகிறோம்” என்றார்கள். ஆனால் அண்ணா. “வேண்டாம். அந்தத் தட்டியில் உள்ளவற்றைப் பகலில் செல்பவர்கள் மட்டும்தானே படித்தறிய முடியும்? இரவில் செல்பவர்களும் படித்தறியும் வண்ணம் நம் செலவில் வாயு விளக்கு ஒன்றை அமைத்திடுங்கள்” எனக் கட்டளை இட்டார். அதன்படி அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த விளம்பரத் தட்டிக்கு அண்ணாவே ஒளி விளக்கு அமைத்துத் தந்தார். இச்செயலால் நாணமுற்ற மாற்று இயக்கத்தினர். தாங்கள் அமைத்த விளம்பரத் தட்டியைத் தாங்களே அகற்றி விட்டனர்.

1962 ஆம் ஆண்டு. அண்ணா அவர்கள் தொடங்கிய இயக்கம் வலிமையான எதிர்க்கட்சியாக விளங்கிய நேரம். அப்போது. ’பூவிருந்தவல்லி’ நகரில் பொதுக் கூட்டம். அதில் உரையாற்றுவதற்கு அண்ணா ‘மாங்காடு’ என்னும் ஊரிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அலைகடலென ஆர்ப்பரித்து வந்த ஊர்வலத்தில் அண்ணா உயரமான அலங்கார ஊர்தியில் அமர்ந்தவாறு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கே... அன்றைய வேளாண்துறை அமைச்சர் திரு. எம். பக்தவச்சலம் எதிர்பாராமல் வந்து ஊர்வலத்துக்கிடையே சிக்கிக் கொண்டார். இதனை அண்ணா பார்த்து விட்டார். உடனே அவர் தம் ஊர்தியிலிருந்து இறங்கினார். திரு பக்தவச்சலம் இருந்த இடத்திற்குச் சென்றார். அவருக்கு எந்த இடையூறும் இல்லாமல் அவரை அனுப்பி வைத்த பின்னர் மீண்டும் தம் ஊர்தியில் ஏறி அமர்ந்து அண்ணா ஊர்வலத்தில் சென்றார்.
திரைப்படத் தயாரிப்பாளர் திரு. ஏ. பி. நாகராசன் சிலம்புச் செல்வர் ம. பொ. சி அவர்களுக்குப் பணமுடிப்பும், மகிழுந்து ஒன்றும் அன்பளிப்பாக வழங்கினார். அதனைக் கண்டு, நம் தலைவருக்கு இதுபோல எதுவும் தரவில்லையே என எண்ணி ஏக்கமுற்ற கவியரசு கண்ணதாசன் பேரறிஞர் அண்ணாவிடம்,“அண்ணா! ஏ. பி. நாகராசன் ம. பொ. சி அவர்களுக்கு வழங்கியதைக் காட்டிலும் மேலும் சிறப்பாக நான் தங்களுக்குப் பணமுடிப்பும் மகிழுந்தும் வழங்க விரும்புகிறேன் அனுமதி தாருங்கள்” எனக் கேட்டார்.
அதுகேட்ட அண்ணா, “ம.பொ.சி தம் இயக்கத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார். அந்த நல்லவருக்கு இத்தகைய உதவி கிடைத்ததை எண்ணி நாம் மகிழ வேண்டும். அதற்கு மாறாக. ‘ம.பொ.சி அவர்களுக்கு அன்பளிப்பு வழங்குகிறார்களே... நாமும் நம் அண்ணாவுக்கு வழங்க வேண்டும் என்று எழுகின்ற உங்கள் ஆர்வத்தை நான் வரவேற்கவில்லை. எனக்கும் நிதி நிலை சரியில்லைதான், ஒரு மகிழுந்து வாங்க இயலாமல்தான் நான் இருக்கிறேன். இருந்தாலும் என்னால் இயன்ற வரை எழுதிப் பிழைக்க விரும்புகிறேன். என்னால் முடியவில்லை என்றால் நானே மக்களைப் பார்த்துக் கேட்பேன்” என்று கூறினார். மேற்குறித்துள்ள நிகழ்வுகள் அண்ணாவின் அளவிட முடியாத அருங்குணத்தை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.