உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2012/01/22

என்னுடைய போதிமரங்கள் - மு.மேத்தா
ஒரு மெளனத்தின் மொழி பெயர்ப்பு

கனலில் ஒரு சிறு படகு
கரை தெரியவில்லை
கவிதை எனும் துடுப்பிருக்கு
அலை விலகவில்லை!

அருகினிலே மனிதர் பலர்
முகம் தெரியவில்லை…
அறிமுகங்கள் பல இருந்தும்
அறிமுகங்கள் மகம் இல்லை!

நான் போட்ட பாதைகளில்

நடைபோட்ட பாதைகளில்
நடை போட்டார் இன்று!

பழுத்ததெல்லாம் நான் கொடுத்தேன்
பலன் தெரியவில்லை….
பறித்தெடுத்த கைகளுக்கென்
விலை தெரியவில்லை!

அடித்தவரின் கை வலிக்கு
நான் மருந்து போட்டேன்….
அடிபட்ட காயங்களை
நான் காட்ட மாட்டேன்!

ராத்திரியில் கூடுகிற
ராஜ சபை நூறு…..
வெற்றிகளும் நியாயங்களும்
விடிந்தவுடன் வேறு!

இலைகளிலே தீப்பிடித்தும்
மரம் கருகவில்லை….
கிளைகளிலே பல பறவை
நிலை தெரியவில்லை…!

என் நிழலை நம்பியுள்ள
இளங் கிளிகள் பாவம்….
எனக்குள்ளே நானெரிந்தால்
இவை எங்கு போகும்….?

சொற்பொழிவு நிகழ்த்துகிறேன்
நான் தரையில் நின்று!
என் பேச்சைக் கேட்பவர்கள்
மேடைகளில் இன்று!

நாளையும் நான்….

இன்னும்
மீதமிருக்கிறது
எவராலும்
பறித்து விட இயலாமல்
இன்னும் மீதமிருக்கிறது….
கண் நிறையக் கனவுகளும்
நானே நினைத்தாலும்
கட்டி வைக்க முடியாத
கைகளும்——

துப்பாக்கிக் குண்டுகளால்
துளைக்க முடியாத
தோள்களும்
பாதைகளுக்குப்
பணிந்து விடாமல்
கம்பீரமாய் நடக்கும்
கால்களும்——
இன்னும்
மீதமிருபக்கிறது!

படுக்கை விரிப்பே
பறிக்கப் பட்டாலும்
விரிந்து கிடக்கும்
வெறுந்தரை எனக்கு
மீதமிருக்கிறது!

எரியாத அடுப்பிலும்
இன்னும் மீதமிருக்கிறது
நெருப்பு——
கோபங்களாய்!

தற்போதைக்கு
நான்
தனிமைப்படலாம்….
ஆனால்
இன்னும் மீதமிருக்கிறது
என்னைத்
தொடர்ந்து வரப் போகிற
தூரத்து ஊர்வலம்!

தீபங்களில்
எண்ணெய்
தீர்ந்து போகலாம்….

ஆனால்
இன்னும் மீதமிருக்கிறது….
என் கைவசம்
சுடச் சுட
ஒரு
சூரியன்!

குடைகளின் ஊர்வலம்

கொஞ்ச நாளாகவே
இங்கு
குடைகள் நடத்தும்
குட்டி ஊர்வலம்!

வானம் கிழிந்து விட்டது.
தடும்மாறிப் போன
தண்ணீர் தையல்காரன்
வானத்தைத் தைக்காமல்
பூமியைத் தைத்தான்.

தூங்கிக் கொண்டிருந்த
தோகையாம் பூமியைத்
துளைத்தன ஊசிகள்!

காயம் பட்ட பூமியின்
கண்ணீரும் ரத்தமும்
இன்னும்
தேங்கிக் கிடக்கிறது
தெருவெல்லாம்!

நகரத்துக்குள் - கடல்
நடந்து வந்த மாதிரி
வீதியெல்லாம்
வெள்ளம்….

அடைத்து வைத்த அணைக்கட்டை
அவிழ்த்து விட்டவர்கள் யார்?
வானப் பானையில்
பிடித்து வைத்த தண்ணீரைக்
கவிழ்த்து விட்டவர்கள் யார்?

பாதைகள் ஓடைகளாய்…..
மேகங்கள் சேனைகளாய்…..
தடுக்கவே முடியாத
தண்ணீர் படையெடுப்பு!

இப்போது
வாழ்க்கை இங்கே
உயிர்களின்
வரவு செலவு கணக்கை
வாசித்துக் கொண்டுருக்கிறது.

பள்ளிக் கூடங்கள் எல்லாம்
படிக்கப் பயன்பட்டது போய்
ஏழைகள் இப்போது
படுக்கப் பயன்படுகின்றன.

சாலைகள் இப்போது
குண்டும் குழியிமாய்….
ஒப்பனை கலைக்கப்பட்ட
நடிகைகள் மாதிரி
காண்ட்ராக்டர்களின்
கதை சொல்கின்றன.

குவளை நீருக்காகக்
கவலைப்பட்டது போய் - இப்போது
தண்ணீரைப்
பார்க்கவே
பயமாக இருக்கிறது.
இந்தத் தண்ணீர்
சுட்டெரிக்கும் நெருப்பை
நல்லவனாக்கிவிட்டது.

ஆமாம்—
நெருப்பு
நெருங்கியதுமே தண்டித்து விடுகிறது.

தண்ணீர்தான்
தட்டிக் கொடுக்கும்
தழுவியணைத்தும்
கடைசில் தனது
கைவரிசையைக் காட்டுகிறது!

ஒரு கவிஞனின் கதை….

ஒரு பாடகன்
தன் கதையைச்
சொல்கிறான்…
ஒரு பக்தன்
தன் விருப்பமான தெய்வத்துடன்
விவாதம் புரிகிறான்!

உரத்துச் சொல்லப்படுகிறது
என் கவிதை
என்னை
ஊமையாக்கி விட்டு!

என் இரவுகளுக்குத் தெரியும்
எப்படி நான்
உருகினேன் என்று!

என்
பகல்களிக்குத் தெரியும்
எப்படி நான்
கருகினேன் என்று!

நானொரு
ரகசியமாய் வாழ்ந்திருந்தால்
ராஜாங்கம் கிடைத்திருக்கும்!
திறந்த புத்தகமாகவே
இருந்ததால்
தெருவில் கிடக்கிறேன்.

வெற்றிகளுக்கு
என்
விலாசம் தெரியவில்லை….
வேதனை மட்டும்
குட்டி போட்ட
பூனை மாதிரி
என்னையே
சுற்றிச் சுற்றி
வருகிறது!.............................

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.